இந்திய பாலியல் தொழில்மையங்களில் விரைவான வளர்ச்சிக்கான ஊக்கமருந்துகளை குழந்தைகள் மீது பயன்படுத்துவது குறித்து காவல்துறை ஆய்வு செய்து வருகிறது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 1 August 2018 09:00 GMT

ARCHIVE PHOTO: Two female sex workers stand on a roadside pavement for soliciting customers in a red light area in Mumbai July 28, 2007. REUTERS/Punit Paranjpe

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஆகஸ்ட் 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாலியல் தொழில் மையங்களில் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு எட்டு பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் நோக்கங்களுக்காக ஆட்கடத்தல் செய்யும் ஒரு வழக்கில் விரைவான வளர்ச்சிக்கான ஊக்க மருந்துகளை பயன்படுத்துவது குறித்து இந்திய காவல்துறை புலன்விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கோயிலுக்குப் புகழ்பெற்ற ஊரான யதாகிரிகுட்டாவில் உள்ள பாலியல் தொழில் மையங்களில் இருந்து 7 வயதுக்கும் கீழான நான்கு பேர் உள்ளிட்டு மொத்தம் பதினோரு சிறுமிகள் மீட்கப்பட்டனர். பாலியல் தொழிலாளிகளாக மாறுவதற்காக இவர்கள் தயார் செய்யப்பட்டு வந்தனர் என மூத்த காவல் அதிகாரி ஒருவர் புதனன்று தெரிவித்தார்.

“இந்தச் சிறுமிகளுக்கு விரைவாக வளர்ச்சியடைவதற்கென தாங்கள் ஊக்க மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி வந்ததாக ஆட்கடத்தல்காரர்கள் எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என யதாகிரிகுட்டாவிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள மாநில தலைநகரான ஹைதராபாதில் உள்ள ஓர் காவல் அதிகாரியான மகேஷ் பகவத் கூறினார்.

“அவர்களின் உண்மையான வயதை விட மூத்தவர்களாக தோற்றமளிப்பதற்கென மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தது என்பதையும், இத்தொழிலில் ஈடுபடுவதற்காக அவர்கள் தயார் செய்யப்பட்டு வந்ததையும் நாங்கள் தெளிவாக உணரமுடிந்த ஒரு வழக்காக இது உள்ளது. ஆட்கடத்தல்காரர்களுக்கு இதற்கான மருந்துகளை வழங்கி வந்த மருத்துவரையும் நாங்கள் தேடி வருகிறோம்” என்றும் தொலைபேசி மூலம் அவர் தெரிவித்தார்.

அரசுமுறை சாரா அமைப்புகளின் கருத்துப்படி இந்தியாவில் பாலியல் தொழிலில் பணிபுரிந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ள 2 கோடி சிறுமிகள், பெண்கள் ஆகியோரில் 1 கோடியே 60 லட்சம் பேர் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

பாலியல் தொழில் மையங்களுக்குக் கடத்திக் கொண்டு வரப்படும் சிறுமிகள் மிகக் கொடூரமான வகையில் ‘அடிபணிய’ வைக்கப்படுகின்றனர் என்பதை மேற்கு வங்க அரசின் 2017-ம் ஆண்டிற்கான அறிக்கை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. இந்தச் செயல்முறை பெரும்பாலான நேரங்களில் வன்புணர்வு, அடித்து உதைத்தல், பட்டினி போடுதல் போன்றவைகளையும் உள்ளடக்கியதாகும்.

இவ்வாறு துரித வளர்ச்சிக்கான ஊக்கமருந்துகள் செலுத்தப்படுவது, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இவர்களைக் கடத்திச் செல்லும்போது அவர்களுக்கு மயக்க மருந்து அளிப்பது போன்றவை இத்தொழிலில் மிகப் பரவலாக இருந்தபோதிலும், மிக மிக அரிதாகவே காவல்துறை இவை குறித்து புலன்விசாரணை நடத்துகிறது என இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் தெரிவிக்கின்றனர்.

“பெரும்பாலான மீட்பு நடவடிக்கைகளில், வயதில் மூத்தவர்களாக தோற்றமளிப்பதற்காக ஊக்க மருந்து செலுத்தப்பட்ட இளம்பெண்களை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான சக்தி வாஹினியைச் சேர்ந்த ரிஷி காந்த் கூறினார்.

“காவல் துறையினர் தங்கள் அறிக்கைகளில் இதனை வெறுமனே குறிப்பிடுவார்களே தவிர இந்த அம்சம் குறித்து மேலும் ஆழமாக விசாரிக்க முனைவதில்லை” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

காவல்துறையின் ஓர் அறிக்கையின்படி இந்தச் சிறுமிகள் ஒவ்வொருக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2,00,000/- வரை கொடுக்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமையன்று நடைபெற்ற அதிரடிச் சோதனைகளின்போது கைது செய்யப்பட்ட எட்டு ஆட்கடத்தல்காரர்களிடமிருந்து தெரியவந்துள்ளது. மற்ற நேரங்களில் இவர்கள் அநாதையான இளம் சிறுமிகளையே குறிவைக்கின்றனர்.

பாலியல் தொழில்மையங்களுக்கு இந்த ஊக்க மருந்துகளை சப்ளை செய்யும் மருத்துவர் ஒவ்வொரு சிறுமிக்குமான மருந்துக்கும் ரூ 25,000/- பெற்றிருக்கிறார் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தச் சிறுமிகள் குடும்பத்தின் ஒரு பகுதியினர்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த ஆட்கடத்தல்காரர்கள் முயற்சி செய்தனர் என்றும், இதற்கென அவர்களில் ஒரு சிலரை பள்ளியில் சேர்த்துள்ளனர் என்றும் பகவத் கூறினார்.

“எனினும் உண்மையில் அவர்களை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவே தயார் செய்து வந்தனர் என்பதை புலன் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

துரித வளர்ச்சிக்கான ஊக்க மருந்துகளை பயன்படுத்துவது என்பது இவ்வாறு தொழிலுக்குத் தயார் செய்வதற்கான பொதுவான ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என இத்தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்காக செயல்பட்டு வரும் உளவியல் நிபுணரான உமா சாட்டர்ஜி கூறினார்.

“தங்களை  ‘ஆரோக்கியமானவர்களாக அல்லது அழகானவர்களாக அல்லது புத்திசாலித் தனமானவர்களாக’ ஆக்குவதற்காகவே இந்த மருந்துகள் வழங்கப்பட்டதாக இதிலிருந்து மீட்கப்பட்டவர்களில் பலரும் எங்களிடம் தெரிவித்தனர்” எனவும் அவர் கூறினார்.

சட்டமாக ஆவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான புதிய மசோதாவின் கீழ் இவ்வாறு ஊக்க மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவது என்பது கடுமையான தண்டனையைக் கொண்ட ‘நன்கறிந்த வகையில் செய்யக்கூடிய ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது  என்றும் சாட்டர்ஜி மேலும் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.