×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு மீட்கப்பட்டவர்கள் தங்களின் “நானும் தான்” கதைகளை இணையத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 5 September 2018 09:38 GMT

A woman carries a basket on her head through a field of vegetables on a foggy morning on the outskirts of Srinagar, November 1, 2016. REUTERS/Danish Ismail

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, செப்.  5 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்)  – சமூக ஊடகப் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்காக இந்தியாவில் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு மீட்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை ஒலிவடிவில் பதிவு செய்கின்றனர். இவை இத்தொழிலில் இருந்து அவர்கள் தப்பிப் பிழைத்த பிறகும் கூட அவர்களை தொடர்ந்து வரும் புறக்கணிப்புகளை குறைக்க உதவும் என இத்தகைய பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்வோர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபடுவோரின் கருத்துப்படி, இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்படும் 2 கோடி வணிக ரீதியான பாலியல் தொழிலாளிகளில், 1 கோடியே 60 லட்சம் பெண்களும் சிறுமிகளும் ஆட்கடத்தலில்  பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

இத்தொழிலில் இருந்து இவர்கள் மீட்கப்பட்ட பிறகும் கூட அவர்கள் பெருமளவிற்கு புறக்கணிப்புகளை எதிர் கொள்கின்ற நிலையில் தங்களது அனுபவங்களை வெளிப்படையாகக் கூற அவர்கள் விரும்புவதில்லை என ஆட்கடத்தலுக்கு  எதிரான அறக்கட்டளையான அன்யய் ரஹித் ஜிந்தகி ( அநீதியற்ற வாழ்க்கை) யைச் சேர்ந்த அருண் பாண்டே தெரிவித்தார்.

“அவர்களது கருத்துக்கள் செயல்பாட்டாளர்கள் அல்லது அதிகாரிகளால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன” என பாண்டே கூறினார்.

“இங்கே அவர்களின் சொந்த குரலிலேயே, சொந்த வார்த்தைகளிலேயே எந்தவித ஒளிவு மறைவுமின்றி அவர்களின் கதைகள் கூறப்படவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்களே தங்களுக்காகப் பேச வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.”

இந்தப் பிரச்சாரமானது ஜூலை மாதத்தில்  யூ ட்யூப் தளத்தில் நான்கு பகுதிகளாக பதிவு செய்யப்பட்ட வகையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள நகரங்களில் உள்ள நான்கு பாலியல் தொழில் மையங்களில் இருந்த பெண்களின் குரல்களின் பதிவுகளையும் உள்ளடக்கியதாக இந்தப் படம் அமைந்திருந்தது. பாலியல் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை பார்வையாளர்களுக்கு வழங்குவதே அதன் நோக்கமாக அமைந்திருந்தது.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு  மீட்கப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்ட தங்களின் கதைகளை வழங்குமாறு இப்போது ஊக்கமளிக்கப்படுகின்றனர். பாண்டேவின் கூற்றுப்படி இவை ஃபேஸ்புக், யூ ட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

பாலியல் தொழிலில் கடத்திக் கொண்டு வரப்பட்ட பெண்களைப் பற்றிய “மாயைகளையும் தவறான கருத்துக்களையும் உடைத்தெறியும் நோக்கத்துடன்” காவல் துறையுடன் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளிலும் இவை திரையிடப்படுகின்றன என்றும் பாண்டே கூறினார்.

“ நாங்கள் விருப்பத்துடன்தான்  இந்தப் பாலியல் தொழில் மையங்களுக்கு வந்தோம் என்றும் இத்தொழிலில் ஏராளமான பணம் சம்பாதிக்கிறோம் என்றும் சமூகத்தில் பொதுவானதொரு கருத்தோட்டம் நிலவுகிறது” என குழந்தையாக இத்தொழிலுக்கு கடத்தி வரப்பட்டு தப்பிப் பிழைத்த 34 வயதான ஒரு பெண் கூறினார்.

இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான கோவாவில் சலவை சேவை நிறுவனம் ஒன்றில் இப்போது பணிபுரிந்து வரும் அந்தப் பெண், இப்போது தனது அடையாளத்தை மறைத்துக் கொள்ள முடியும் என்பதோடு தனது மோசமான அனுபவங்களை எவ்வித பயமும் இன்றி சொல்ல முடியும் என்பதாலேயே தனது கதையை பதிவு செய்ய ஒப்புக் கொண்டதாக  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

இத்தகைய ஒலிப்பதிவுகளில் குடிபோதையில் இருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு நிகழும் வன்முறை, பாலியல் தொழிலை விட்டு வெளியேறுவது மிகவும் கடினம் என்று தாங்கள் ஏன் கருதினோம் என்பதைப் பற்றியெல்லாம் அந்தப் பெண்கள் கூறியதாக பாண்டே கூறினார்.

ஜூலை மாதத்தில்  பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில் வழக்கு எதையும் பதிவு செய்யாமல் இருப்பதற்கு பதிலுதவியாக இலவசமாக ஓர் இரவு முழுவதும் பாலுறவு கொள்வதற்கான பேரத்தை பாலியல் தொழில் மையங்களின் உரிமையாளர்களுடன் காவல்துறை அதிகாரிகள் செய்ததையும் ஒரு பெண் நினைவு கூர்ந்திருந்தார்.

“வீட்டின் பாதுகாப்பான சூழலில் இருந்து பாலியல் தொழில் மையங்களுக்கு சென்ற எனது பயணத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் வெளிப்படையாகப் பேசினேன்” என இத்தொழிலில் இருந்து மீண்டு கோவாவில் வசிக்கும் அந்தப் பெண் கூறினார்.

“இதைப் பற்றி ஒரு சில கணங்களாவது அவர்கள் யோசித்துப் பார்த்தாலும் கூட, எங்களது துயரத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்குவார்கள்.”

பாலியல் தொழிலுக்காக நடைபெற்று வரும் கடத்தல்  தொழிலை தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள சட்ட முன்வடிவின் கீழ் பாலியல் தொழிலில் விருப்பத்துடன் ஈடுபட்டுவரும் பெண்களும் கட்டாயமாக அதிலிருந்து மீட்கப்படுவார்களா? என்ற விவாதம் இந்தியாவில் நடந்து வரும் பின்னணியில்தான் இத்தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்களின் இந்தப் பிரச்சாரம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->