“என்னை பிரியா என்று அழையுங்கள்” – இந்திய நெசவாலைத் தொழிலில் நிகழும் கொடுமைகள் குறித்த விவாதத்தை தூண்டிவிடும் குறும்படம

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 16 August 2018 06:43 GMT

Teenage spinning mill workers participate in an awareness programme in Kurumpatti village in southern Indian state of Tamil Nadu, August 8, 2018. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

திண்டுக்கல், ஆக. 16 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – தென்னிந்தியாவில் இளம் நெசவாலைத் தொழிலாளி ஒருவரைப் பற்றிய குறும்படம் சுரண்டல் மற்றும் கொடுமை ஆகியவற்றால் நிரம்பியுள்ள ஒரு தொழிலின் உயிர்நாடி குறித்த விவாதத்தை கிராமப்புற மக்களிடையே தூண்டி விட்டுள்ளது என இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் தெரிவிக்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுக்காக பருத்தியை இழை, துணி, உடை என உருமாற்றிக் கொண்டிருக்கும் 1,500க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் சுமார் 4,00,000 பேர் பணிபுரிகின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது “என்னை பிரியா என்று அழையுங்கள்” என்ற இந்தக் குறும்படம்.

குறிப்பாக ஏழ்மை நிரம்பிய, அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களிலிருந்து வரும் இந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கென சட்டங்கள் இருந்தபோதிலும் கூட, அவர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உழைக்க வேண்டியுள்ளதோடு, பெரும்பாலான நேரங்களில் அச்சுறுத்தல், பாலியல் ரீதியான சீண்டல்கள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றையும் எதிர்கொள்கின்றனர்.

இந்தத் தொழிலில் சேர்ந்தால் எத்தகைய அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறியாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் உள்ளனர் என்பதோடு, அவ்வாறு வேலையை மேற்கொண்டவர்கள் இத்தகைய கொடுமைகளிலிருந்து எவ்வாறு தங்களை விடுவித்துக் கொள்வது என்று தெரியாதவர்களாகவும் உள்ளனர் எனவும் இதற்கான இயக்கங்களை நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 405 கிராமங்களில் “என்னை பிரியா என்று அழையுங்கள்” என்ற இந்தக் குறும்படத்தைத் திரையிடுவதன் மூலம் தொழிலாளர்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில் இத்தொழிலில் நிலவும் நிலைமைகள் குறித்த தெளிவான சித்திரத்தை இந்தப் பிரிவினருக்கு தெரிவிப்பது என்பதே இதைத் திரையிடும் 13 அறக்கட்டளைகளின் நோக்கமாக உள்ளது.

“இளம் தொழிலாளர்களிடையே நிலைமையை எதிர்கொள்ளும் பக்குவத்தை உருவாக்குவது; இத்தகைய ஆலைகளில் சேர்வதற்காக காத்திருக்கும் பதின்பருவத்தினருக்கு வலுவூட்டுவது ஆகியவையே எமது நோக்கமாகும்” என இந்தக் குறும்படத்தைத் திரையிடும்போது மேற்கொள்ள வேண்டிய விவாதங்கள் பற்றிய வரையறுப்பை உருவாக்குவதில் உதவி செய்த குழந்தைகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளரான ராமமூர்த்தி வித்யாசாகர் குறிப்பிட்டார்.

A teenage spinning mill worker attends an awareness programme at Kurumpatti village in south India, August 8, 2018. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

தமிழ்நாட்டிலுள்ள நெசவாலைகளிலும், நெசவாலைத் தொழிலாளர்கள் தங்கி வரும் விடுதிகளிலும் மூன்றுமாத காலப்பகுதியில் மட்டுமே –தற்கொலை என்று சந்தேகப்பட்ட மரணங்கள் உள்ளிட்டு – 20 மரணங்கள் இந்த ஆண்டில் ஆவணப்படுத்தியுள்ள நிலையானது இந்த இலக்குகளை மேலும் துரிதப்படுத்தியது.

60க்கும் மேற்பட்ட நெசவாலைத் தொழிலாளர்களுடன் மேற்கொண்ட பேட்டிகள் மற்றும் வாங்கிய கடனை திருப்பித் தரும் வரையில் தொடர்ந்து ஊதியமின்றி வேலை செய்து கொண்டிருந்த 308 கொத்தடிமை தொழிலாளர்களிடமிருந்து இது குறித்த இயக்கங்களை மேற்கொள்வோர் சேகரித்த வாக்குமூலங்கள் ஆகியவற்றின்   அடிப்படையில் அரை மணி நேரம் ஓடும் இந்தக் குறும்படத்தை படத் தயாரிப்பாளர்கள் உருவாக்கியிருந்தனர்.

இக்குறும்படத்தின் முக்கிய கதாபாத்திரமான பிரியா தன் பெற்றோர் வாங்கியிருந்த ஒரு கடனை அடைப்பதற்காக நெசவாலை ஒன்றில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட மிகவும் புத்திசாலியானதொரு மாணவி ஆவார். இந்தச் சூழலானது பெரும்பாலான இளம் தொழிலாளிகளின் நிலையைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது.

நெசவாலைகளில் நிலவும் அதீதமான பாலியல் தொல்லைகள், மிகக் குறைவான ஊதியம், முதலாளிகளின் போலியான உறுதிமொழிகள், அவர்களது இல்லங்களில் நிலவும் கொடுமையான வறுமை ஆகியவற்றை இக்குறும்படம் பிரியாவின் பார்வையின் மூலம் வெளிப்படுத்துகிறது.

தொழிலாளிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளுக்கு மேலாகவும் நிலைமைகளை இக்குறும்படம் சித்தரிக்கும் அதே வேளையில், இதன் திரையிடல்களின்போது வெளிவந்த விவாதங்கள் நெசவாலைத் தொழிலில் இளம் பெண்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கும் சமூக நிலைமைகளையும் வெளிக்கொண்டு வந்தது.

குரும்பட்டி என்ற ஒரு கிராமத்தில் இக்குறும்படம் திரையிடப்பட்டபோது பிரியாவின் போராட்டங்கள் குறித்தும், 15 வயதுச் சிறுமி எத்தனை மணி நேரம் வேலை செய்ய முடியும் என்பது பற்றியும், குடிப்பழக்கம் பற்றியும், பாலின வேறுபாடுகள் பற்றியும் தொழிலாளர்கள் விவாதம் செய்தனர்.

 “இந்தக் குறும்படம் உண்மையிலேயே அவர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது” என திண்டுக்கல் மாவட்டத்தில்  பின்னலாடை தொழிலாளர்களுக்கு உதவி புரியும் ஓர் அறக்கட்டளையான செரீன் செக்குலர் சோஷியல் சர்வீஸ் சொசைட்டியுடன் இணைந்து பணிபுரிபவரான சிவரஞ்சனி சின்னமுனியாண்டி கூறினார்.

“இந்த நெசவாலை வேலைகளை தாங்கள் ஏன் மேற்கொள்கிறோம் என்பது பற்றியும், அந்த வேலை எத்தகைய சோர்வை ஏற்படுத்துகிறது என்பதையும், இதை விட்டுவிட வேண்டும் என்று தாங்கள் எவ்வாறு ஏங்குகிறோம் என்பதையும் இளம்பெண்கள் மிகவும் வெளிப்படையாகவே பேசினார்கள்”

இத்தகைய திரையிடல்களை ஏற்பாடு செய்தவர்களின் கருத்துப்படி இந்தக் குறும்படத்தின்  முடிவு குறிப்பாக தீவிரமான விவாதத்தைக் கிளப்பி விட்டது.

இக்குறும்படத்தின்  நாயகியான பிரியா தனது சமூக, வேலை ரீதியான சவால்களை எல்லாம் முறியடித்து இறுதியில் ஒரு மருத்துவர் ஆகிறார் என்ற மகிழ்ச்சியானதொரு முடிவு தங்களால் எப்போதுமே அடைய முடியாத ஒன்று என நெசவாலைத் தொழிலாளர்களில் பலரும் வாதம் செய்தனர்.

“இத்தகையதொரு விவாதம் நல்லதுதான். சுரண்டலை கேள்விக்கு உள்ளாக்கவும், தங்களின் நிலைமைகளை மேம்படுத்திக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும் வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.” என வித்யா சாகர் கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.