×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறுநீரக மாற்று மோசடியில் உறுப்புகளுக்காக ஏழைகள் குறிவைக்கப்படுகிறார்கள் என மும்பை போலீஸ் சந்தேகம்

by -ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Tuesday, 19 July 2016 11:47 GMT

A homeless girl, covered with a blanket, sleeps on a road divider along a street in Mumbai in this 2011 file photo. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

மும்பை, ஜூலை 19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - மும்பையில் உள்ள உயர் தர மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த ஒரு சிறுநீரக மாற்று மோசடிக்குப் பின்னால் குற்றங்களில் ஈடுபடும் ஒரு கும்பல் ஏழைகளின் உடல் உறுப்புகளைக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறது என தாங்கள் சந்தேகப்படுவதாக மும்பை போலீஸ் தெரிவித்தது. இந்தியாவில் மாற்று அறுவை சிகிச்சைக்கான உடல் உறுப்புகள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இந்தத் தொழிலில் கறுப்புச் சந்தை அதிகரிப்பதற்கு இந்த சம்பவம் மிகச் சமீபத்திய உதாரணமாக அமைகிறது.

இந்தியாவின் நிதித் தலைநகரத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஹிராநந்தானி மருத்துவமனையில் கடந்த வாரம் நடைபெறவிருந்த ஒரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானம் தருபவரின் ஆவணங்கள் போலியானவை என மருத்துவ மனைக்குத் தகவல் கிடைத்ததைத்  தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

“மிக பிரம்மாண்டமான  ஒரு மோசடிக்கு நாங்கள் ஆளாக்கியிருக்கிறோம்” என்று ஹிராநந்தானி மருத்துவமனையின் தலைமை நிர்வாகி சுஜித் சாட்டர்ஜி, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனையின் ஊழியர் ஒருவரும் வேறு ஆறு நபர்களும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் இதற்கு முன்பு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து விசாரிக்க இந்த விவகாரம் காவல் துறையை தூண்டி விட்டுள்ளது.

“ஏழைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கென போலி ஆவணங்களை தயாரித்து, அவர்களை உறவினர்களைப் போல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்ற, குற்றங்களில் ஈடுபடும் கும்பல் ஒன்று இதன் பின்னால் இருக்க கூடுமா?  என்ற வகையில் நாங்கள் இதை விசாரித்து வருகிறோம்.” என காவல்துறையின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உடல் உறுப்புகளை பணத்திற்கு விற்பது இந்தியாவில் சட்டவிரோதமானது ஆகும். இவ்வாறு மாற்று உறுப்பு தேவைப்படுவோரின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானமாக வழங்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மருத்துவ மனையிலும் இத்தகைய உறுப்பு தானங்கள் ஒரு சிறப்புக் குழுவால் அனுமதிக்கப்படுகிறது. இந்தச் சிறப்புக்  குழுவில் சமூக சேவகர்கள், மாநில அரசின் ஓர் அலுவலர் ஆகியோரும் அடங்குவர்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 2,00,000 பேருக்கு புதிய சிறுநீரகமும், 1,00,000 பேருக்கு புதிய கல்லீரலும்  தேவைப்படுகிறது என உறுப்பு தானத்தில் கவனம் செலுத்தி வரும் அரசுமுறை சாரா குழுவான மோகன் ஃபவுண்டேஷன் தெரிவிக்கிறது.

இந்தத் தேவையில் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே உறுப்புகள் பெறப்படுகின்றன. சட்டபூர்வமான உறுப்பு தானம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. ஏனெனில், உறுப்பு தானம் குறித்த அறியாமையும், அது பற்றிய ச்கலாச்சார ரீதியான தயக்கமுமே இதற்குக் காரணமாகும்.

இதில் தொடர்ந்து நிலவி வரும் பற்றாக்குறையானது சட்டவிரோதமான மாற்று அறுவை சிகிச்சைகளுக்கென கறுப்புச்சந்தை செழித்து வளரவும், உறுப்புகளுக்காக தனி நபர்கள் கடத்தப்படவும் வழிவகுக்கிறது. நோயினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்த உறுப்புகளுக்காக இடைத்தரகர்களை அணுகுவதோடு, ஒரு சிறுநீரகத்திற்கு ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேலும் தருவதற்கு தயாராக உள்ளனர்.

இந்த இடைத்தரகர்கள் பெரும்பாலும் கிராமங்களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று பொருத்தமான உறுப்பு தானம் அளிப்பவர்களை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். சில நேரங்களில் நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக, போலியாக உறுதிமொழி அளித்தும் கூட அவர்களை கவர்ந்திழுக்கின்றனர். 

தங்களது ஒரு சிறுநீரகத்தை இவ்வாறு தானமாக இழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாகவும், படிப்பறிவு அற்றவர்களாகவுமே உள்ளனர் என்பதோடு, இதற்காக கைமாறும் பணத்தில் ஒரு சிறு பகுதியையே அவர்கள் பெறுகின்றனர். மீதமுள்ள தொகையை இடைத்தரகர்கள் சுருட்டிக் கொள்கின்றனர்.

“நாங்கள் வெறும் மருத்துவர்கள்தான். இதற்காகவே உருவாக்கப்படும் விரிவான சூழ்ச்சிகளையும், போலியான ஆவணங்களையும் கண்டுபிடிப்பதற்கான திறமை எங்களுக்குக் கிடையாது” என ஹிராநந்தானி மருத்துவமனையின் சாட்டர்ஜி கூறியதோடு, தமது மருத்துவமனை காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்றும், இத்தகைய மாற்று அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் உறவினர்கள் என்று நம்ப வைத்து இதில் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்களை அகற்ற, இத்தகைய ஆட்கடத்தல்காரர்களால் தங்கள் மருத்துவமனை ஏமாற்றப்பட்டது  என புதுதில்லியில் உள்ள ஒரு மருத்துவமனை கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

சமீப ஆண்டுகளில் வெளிவந்த வேறு சில வழக்குகளில் இவ்வாறு சட்டவிரோதமாக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கென  வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தொடர்பும் இருந்தது. இதற்காக உறுப்பு தானம் அளிப்பவர்களாக நேபாளத்திலிருந்து ஆட்கள் கடத்தி வரப்படுகிறார்கள்.

“இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு நிலைமைதான். எனினும், மிகப் பெருமளவில் பற்றாக்குறை இருப்பது குறித்து நாம் கவனம் செலுத்தாதவரை, இந்த நிலை மாறாது” என மோகன் ஃபவுண்டேஷனின் நிறுவனரும், மேலாண்மை அறங்காவலருமான சுனில் ஷ்ராஃப் கூறினார்.

“இது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியமும், மேலும் அதிக அளவில் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்த வேண்டிய தேவையும் நமக்கு உள்ளது. அது மட்டுமே இந்தப் பிரச்சனையை சரி செய்வதற்கான ஒரே தீர்வாகும்” என்றார் அவர். 

(செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->